#பறந்தது 18 MLA.,க்கள் தகுதி நீக்க நோட்டிஸ்! பரபர ராஜஸ்தான்
துணை முதல்வர் பதவியிலிருந்து தூக்கப்பட்ட சச்சின் பைலட் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது பற்றி விளக்கம் கேட்டு ராஜஸ்தான் சட்டசபை சபாநாயர் சி.பி.ஜோஷி, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்படுள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.மாநில காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்து வந்த சச்சின் பைலட், முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார்.
மேலும் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் முகாமிட்டு உள்ளார்.இதனால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் கெலாட், காங் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை திடீரென்று ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டிலேயே கூட்டினார்.
ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கட்சியின் கொறடா மகேஷ் ஜோஷி உத்தரவிட்டு இருந்தார் ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவருடைய ஆதரவு 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் உடனடியாக நீக்கப்பட்டார்.மேலும் அமைச்சர் பதவியிலிருந்து, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் ராஜஸ்தான் சட்டசபை சபாநாயகர், சி.பி.ஜோஷிக்கு, காங் கட்சியின் கொறடா மகேஷ் ஜோஷிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:
சச்சின் பைலட் மற்றும் அவரை ஆதரிக்கின்ற 18 எம்.எல்.ஏக்களும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். மாநில அரசை வேண்டுமென்றே கவிழ்க்கும் சதிச் செயலில், திட்டமிட்டு ஈடுபட்டு உள்ளனர்.
எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிட்ட பின்னரும் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்களும், கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.மேலும் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பா.ஜக பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது.
இதற்கு உறுதுணையாக சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் பைலட் உட்பட 19 பேரையும் அரசியல் சட்டத்தின் 10வது பிரிவின் கீழ், எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் கூறியிருந்தார்.
இதனை அடுத்து, சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருக்கும்,தகுதி நீக்கம் செய்வது பற்றி விளக்கம் கேட்டு சபாநாயகர் சி.பி.ஜோஷி அதிரடி நடவடிக்கையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அனுப்பட்டும் நோட்டீசுக்கு நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.இது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலரும், ராஜஸ்தான் மாநில பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே கூறுகையில்:
சச்சின் பைலட்டுக்கு, காங்கிரஸ் கட்சி இன்னும் கதவை மூடவில்லை. தன் தவறை அவர் உணர வேண்டும். பா.ஜகவின் வலையில் விழாமல், மீண்டும் அவர் காங்கிரசில் சேரஆண்டவனை பிரார்த்திக்கிறேன். என்று கூறினார்.
சபநாயகரின் அதிரடி நோட்டீஸ்?? பின்புல அரசியல்!
ராஜஸ்தானில், முதல்வர், அசோக் கெலாட் அரசுக்கு, நுாலிழை பெரும்பான்மை உள்ளது என்று தெரிய வந்துள்ளது.ராஜஸ்தான் சட்டசபையை பொருத்தவரை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, 200.
இதில் காங்.,சுக்கு சபாநாயகர் உள்ளிட்ட 107 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் பெரும்பான்மை பலத்துக்கோ 101 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் கெலாட் கூட்டிய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் காங்கிரசை சேர்ந்த, 88 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர்.அதில் 10 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் பாரதிய பழங்குடியின கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலா, 2 எம்.எல்.ஏ.,க்களும், கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால் முதல்வர் கெலாட் அரசுக்கு 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பது தற்போது உறுதியானது.
என்றாலும் பாரதிய பழங்குடியின கட்சியின் 2 எம்.எம்.ஏ.,க்களும், அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தருவது பற்றி சரியான நேரத்தில் முடிவு செய்வோம் என்று பின்னர் தெரிவித்தனர். இதனால், சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் ஏற்ப்பட்டால், கெலாட் அரசு நுாலிழை வித்தியாசத்தில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஒரு வேளை, பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தால் சட்டசபையின் பலம் 181 ஆக குறைந்து விடும். அப்பொழுது பெரும்பான்மையின் பலத்தைப் பெற, 91 எம்.எல்.ஏக்கள் போதும்.
எதிர்கட்சியான பா.ஜகவுக்கு, 75 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும் பெரும்பான்மை பலம் பெற 16 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறுவது, பா.ஜகவுக்கு எளிதான காரியமல்ல. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தவிர மற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் பா.ஜகவை ஆதரித்தால் மட்டுமே, பெரும்பான்மை பலத்தினை பெற முடியும். அதனால், 19 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் முதல்வர் கெலாட் அரசு தப்பித்து விடும் என்று அரசியல் வட்டராம் தெரிவிக்கின்றது. ஆனால், கெலாட் ஆதரவு காங். எம்.எல்.ஏக்கள் சிலர் பைலட் பக்கம் தாவினால் இந்த நிலைமை அப்படியே தலைகீழமாக மாறிவிடுடவும் வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.