தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!
கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட அந்த 37 மீனவர்களும் காங்கேசந்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மீனவர்களை வானத்தை நோக்கி சுட்டு விரட்டியடித்துள்ளனர்.
இலங்கையில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். சமீபத்தில், இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 பேரை, 3 படகுகளுடன் சிறைபிடித்தது. மேலும், கைது செய்யப்பட்ட அந்த 37 மீனவர்களும் காங்கேசந்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மயிலாடுதுறை எம்.பி சுதா எழுதிய கடிதத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
ராகுல் காந்தியின் கடிதத்தில், “சிறு, குறு இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்படுவதும், அநியாயமாக சொத்துக்களை பறிமுதல் செய்வதும், அவர்களால் பெரும் அபராதம் விதிக்கப்படுவதும் தொடர் சம்பவங்கள் கடுமையான கண்டனத்திற்குரியது. இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்து, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் முன்கூட்டியே விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம்#Srilanka#Mayiladuthurai@AdvtSudha @RahulGandhi @DrSJaishankar pic.twitter.com/Dt5C91Rc6p
— கதிர் கோ 𑀓𑀢𑀺 𑀭𑁆 𑀓𑁄 (@RaviraajAqua) September 28, 2024
முன்னதாக, இலங்கை அரசை வலியுறுத்தி அந்நாட்டு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொழும்புவில் நடைபெற உள்ள இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.