“நீங்க அங்கே போகக் கூடாது ” ராகுல் காந்தி காரை தடுத்து நிறுத்திய உ.பி போலீஸ்!
உ.பி மாநிலம் சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியின் காரை டெல்லி - உ.பி எல்லையியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
டெல்லி : உத்திர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்று முகலாயர் ஆட்சி காலத்தில் இந்து கோவில் மீது கட்டப்பட்டது என உள்ளூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் 24ஆம் தேதி தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய மசூதிக்கு வந்தனர். அப்போது அங்கு ஆரம்பித்தது வன்முறை, பதட்டம்.
அங்கு ஆய்வு நடத்தக்கூடாது என தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறி சில உயிரிழப்புகள் நேர்ந்தன. அந்த இடத்தில் தற்போது வரை பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு அரசியல் தலைவர்கள் யாருக்கும் அம்மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் சில உள்ளூர் அரசியல் தலைவர்கள் சிலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உ.பி மாநில ரேபரேலி தொகுதி எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று (டிசம்பர் 4) சம்பல் பகுதிக்கு வருவார் என முன்னரே அறிவிக்கப்பட்டது. அப்போதே அரசியல் தலைவர்கள் இங்கு வரக்கூடாது என கூறப்பட்ட நிலையில், உ.பி மாநில எம்பி என்கிற முறையில் அரசியல் ரீதியாக அவருக்கு உரிமை உள்ளது என காங்கிரஸ் கட்சியினர் கூறியிருந்தனர்.
இப்படியான சூழலில் இன்று டெல்லியில் இருந்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என இருவரும் காரில் சம்பல் பகுதிக்கு புறப்பட்டனர். அப்போது, டெல்லி – உ.பி மாநில எல்லையான காஜிபூர் (உ.பி) ராகுல் காந்தி சென்ற வாகனத்தை உ.பி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ஏற்கனவே, கடந்த நவம்பர் 30ஆம் தேதி சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதே போல கடந்த டிசம்பர் 2ஆம் தேதி சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.