ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா 2.O.. டிசம்பரில் துவங்க திட்டம்.?
பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாம் கட்டத்தை நடத்துவது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருகிற நிலையில், ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பாரத் ஜோடோ யாத்ரா 2.0, இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் பிப்ரவரி 2024 க்கு இடையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் கட்டம் செப்டம்பர் 7ம் தேதி அன்று தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. ஜனவரி 30ம் தேதி காஷ்மீர் வரை நடைபெற்றது. இந்த யாத்திரையின் போது, 126 நாட்களில் 12 மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்கள் வழியாக, சுமார் 4,081 கிலோமீட்டர்கள் ராகுல் காந்தி பயணம் செய்தார்.
இந்த யாத்திரையில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன், சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத் மற்றும் என்சிபியின் சுப்ரியா சூலே போன்ற கட்சித் தலைவர்களும் பல்வேறு நேரங்களில் ராகுல் காந்தியுடன் நடந்தனர். 12 பொதுக் கூட்டங்கள், 100க்கும் மேற்பட்ட தெரு முனை கூட்டங்கள் மற்றும் 13 செய்தியாளர் சந்திப்புகளில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
தற்போது பாரத் ஜோடோ யாத்ரா 2.0 ஆனது தொடங்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான பி.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பின் போது, காங்கிரஸ் காரியக் கமிட்டியின் (CWC) முதல் கூட்டத்தின் ஆலோசனையில் உரையாற்றினார்.
அப்போது பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டவது கட்டத்தை ஏற்பாடு செய்வது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாம் கட்டத்தை நடத்த கட்சி பரிசீலித்து வருவதாகவும், இந்த யாத்திரை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். ஏனென்றால், முதல் யாத்திரை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.