மேல்முறையீட்டிற்காக ராகுல் காந்தி செல்வது தேவையில்லாத நாடகம் – அமைச்சர் கிரண் ரீஜிஜூ
ராகுல் காந்தி மேல்முறையீட்டிற்காக தானே செல்வது தேவையில்லாத நாடகம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சனம்
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தீவிர பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கில் நீதிமன்றம், கடந்த மாதம் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. அதன்படி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய எதுவாக ஜாமீனும் வழங்கப்பட்டு, தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தியும் வைத்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ராகுல் காந்தி மேல்முறையீடு
இந்த நிலையில், 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி, தீர்ப்பு வந்து 11 நாட்களுக்கு பின், சூரத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நேரில் மேல்முறையீடு செய்ய உளளார். இதனையடுத்து, ராகுல்காந்தியே நேரில் சென்று முறையீடு செய்வது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரீஜிஜூ விமர்சித்துள்ளார்.
அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சனம்
இதுகுறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி சூரத் சென்றுள்ளார். மேல்முறையீட்டிற்காக தானே செல்வது தேவையில்லாத நாடகம். சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக, எந்தவொரு குற்றவாளியும் தனிப்பட்ட முறையில் செல்வதில்லை. இது நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சிறுபிள்ளைத்தனமான முயற்சி என விமர்சித்துள்ளார்.