அவதூறு வழக்கிற்காக குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்!
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசிய வழக்கில் குஜராத் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜராகியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அந்நேரம் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லோரும் பொதுவான குடும்ப பெயரில் வருவதாகவும் எப்படி அனைத்து திருடர்களும் மோடி எனும் பொதுவான குடும்ப பெயர்களை கொண்டு இருக்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதனை அடுத்து குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பரமேஷ் மோடி என்ற எம்எல்ஏ ராகுல்காந்தி ஒட்டுமொத்த சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாக கூறி அவர் மீது குற்ற வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் சூரத்தில் உள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில் இறுதி வாக்குமூலத்தை சமர்ப்பிப்பதற்காக ஜூன் 24ஆம் தேதி ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என நீதிபதி அவர்கள் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று சூரத் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜராகியுள்ளார்.