MATCH FIXING செய்து வெல்ல முயலும் மோடி! ராகுல் காந்தி கடும் தாக்கு
’INDIA’ Alliance: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம்.
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும்,காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் பேரணி இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா, விசிக தலைவர் திருமாவளவன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “பாஜக இத்தேர்தலில் 400 எம்.பி.,க்களுடன் நாடாளுமன்றத்தில் அமர்வோம் என்று முழங்குகிறது. இந்த முழக்கம் மேட்ச் ஃபிக்ஸிங் செய்தால் மட்டுமே சாத்தியமாகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சமூக வலைதளம், மேட்ச் ஃபிக்ஸிங், ஊடகத்தின் மீதான அழுத்தம் ஆகியன இல்லாமல் பாஜகவால் 180 சீட்கள் கூட பெறமுடியாது.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் அம்பயர்களுக்கு அழுத்தம் ஏற்படும்போது விளையாட்டு வீரர்கள் விலைபோகின்றனர். கேப்டன்கள் மிரட்டப்படுகிறார்கள். நம் முன்னால் இப்போது மக்களவைத் தேர்தல் உள்ளது. இதில் அம்பயர்களை பிரதமர் மோடி தேர்வு செய்கிறார். நம் அணியின் இரண்டு வீரர்களை ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் மிகப்பெரிய எதிர்க்கட்சி. ஆனால் எங்களின் அனைத்து கணக்குகளும் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் முடக்கியுள்ளனர். இது எந்த மாதிரியான தேர்தல் எனத் தெரியவில்லை. பிரதமர் மோடி இந்த நாட்டின் சில தொழிலதிபர்களுக்காக தேர்தல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அரசமைப்பை ஏழைகளிடமிருந்து பறிக்கிறார்.
இந்தத் தேர்தல் சாதாரணமானது அல்ல. இது தேசத்தை, அரசமைப்பைக் காப்பாற்றுவதற்கான தேர்தல். இதில் நீங்கள் முழு சக்தியுடன் வாக்களிக்காவிட்டால், அவர்களின் மேட்ச் ஃபிக்ஸிங் வென்றுவிடும். அது வெற்றி பெற்றுவிட்டால் அரசமைப்பு சிதைக்கப்படும்” என்றார்.