காரில் யாத்திரை என்றால் நான் பங்கேற்க மாட்டேன்.! -காரணம் கூறிய ராகுல் காந்தி.!
காரில் ஒற்றுமை யாத்திரை என்றால் அதில் பங்கேற்க மாட்டேன். காரில் கூட செல்ல முடியாத இடங்கள் இருக்கிறது . அங்குள்ள மக்களை சந்திக்க வேண்டும். என ராகுல் காந்தி கூறினார் என்று கேரளா மூத்த காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில், பாரத ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு 3,570 கிமீ கடந்து, 12 மாநிலங்கள் மற்றும் 2யூனியன் பிரதேசங்களை கடக்க உள்ளார். வழிநெடுக காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி நிகழ்ச்சி, பொதுமக்கள் சந்திப்பு என கடந்து சென்று கொண்டிருக்கிறார்.
இந்த பாரத் ஜோடோ யாத்ரா இன்று 13வது நாளை எட்டியுள்ளது. ஆலப்புழாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மரக்கன்றை நட்டு வைத்து பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி.
அதிகாலை முதல் 14 கி.மீ., தூரம் கடந்த ராகுல்காந்தி, கேரளாவில் குதியதோடு என்ற இடத்தில் பாதி யாத்திரையை நிறைவு செய்தார். மூத்த கேரள காங்கிரஸ் தலைவர்கள் யாத்திரையில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கேரள காங்கிரஸ் முக்கிய தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்’ இதுவரை 13 நாட்களில் 225 கி.மீ. தூரத்தை ராகுல்காந்தி கடந்துள்ளார். இன்று யாத்திரை மேற்கொண்டு ராகுல்காந்தி கொச்சி சென்றடைய உள்ளார். இந்த ஒற்றுமை யாத்திரையானது முதலில் காரில் செல்லும் வகையில் தான் திட்டமிடப்பட்டது.
ஆனால், காரில் மக்களை சந்திக்க சென்றால் நான் பங்கேற்க மாட்டேன் என கூறிவிட்டார் ராகுல்காந்தி. மேலும், காரில் செல்ல முடியாதபடி பல இடங்கள் நாட்டில் உள்ளதால் அவர்களுக்கு மதிப்பளித்து தான் நடை பயணம் எனும் முடிவு எடுக்கப்பட்டது.’ என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.