இந்த தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான தேர்தல்… ராகுல் காந்தி பேட்டி!
Rahul Gandhi: இந்த தேர்தலில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரமும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில் வரும் தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். உத்தரபிரதேசம் காசியாப்பாத்தில் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ராகுல்காந்தி கூறியதாவது, வேலையில்லா திண்டாடட்டம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாகும். பணவீக்கம் நாட்டின் 2வது முக்கிய பிரச்சனையாகும்.
ஆனால், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்சனைகள் குறித்து பிரதமரோ, பாஜகவினரோ வாயை திறப்பதே இல்லை. ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருகிறது. மறுபக்கம் காங்கிரஸும், இந்தியா கூட்டணி கட்சிகளும் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க முயற்சி செய்கின்றன.
விசாரணை அமைப்புகள் மூலம் பல நிறுவனங்களை மிரட்டி பாஜக கொள்ளை அடித்துள்ளது. வெளிப்படைத் தன்மைக்காகவே தேர்தல் பத்திரங்கள் முறை கொண்டுவரப்பட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார். அப்படி என்றால் அந்த முறையை உச்சநீதிமன்றம் ஏன் ரத்து செய்தது? என கேள்வி எழுப்பினார்.
ஊழல் செய்வதில் பிரதமர் மோடி சாம்பியன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தேர்தலில் பாஜக 180 இடங்களை வெல்லும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என நினைக்கிறன். இதை பாஜக கட்சியினரே கூறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி, அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஆதரவால் வேலை வாய்ப்பு உருவாக்கம்குறைந்துள்ளது எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், நாங்கள் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மக்களின் கருத்துக்களை பெற்று மேம்படுத்தி வருகிறோம். உத்திரபிரதேசத்தில் எங்களின் கூட்டணி மிகவும் வலுவானது, நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். இங்கு அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.