பிரதமர் பதற்றத்தில் இருப்பது பேச்சிலேயே தெரிகிறது… ராகுல் காந்தி விமர்சனம்!
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் தேர்தலை முன்னிட்டு பாஜகவும், காங்கிரஸும் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த சில நாட்களாக பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கு ராகுல் காந்தியும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கர்நாடகாவின் பிஜப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பாஜக அரசு ஒரு சிலரை கோடீஸ்வரர்களாக்கும். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும்.
உண்மையான பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசை திருப்பி வருகிறார். அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே உங்களுக்கு உரிமைகளும், குரல்களும், இடஒதுக்கீடுகளும் கிடைத்துள்ளன. ஆனால், பிரதமர் மோடி இதை உங்களிடமிருந்து பறிக்க விரும்புகிறார்.
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து உள்ளதாகவும், 70 கோடி மக்களிடம் இருக்கவேண்டிய செல்வம் 22 பேரிடம் உள்ளது எனவும் குற்றசாட்டியுள்ளார். இதுபோன்று, நாட்டின் 40 சதவீத செல்வத்தை ஒரு சதவீத மக்கள் மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
மேலும், வறுமை, பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளில் குறித்து மோடி வாயை திறப்பது இல்லை. இந்தப் பிரச்னைகளை தீர்க்க காங்கிரஸால் மட்டுமே முடியும். எனவே, முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி பீதியில் உள்ளனர். பிரதமர் பதற்றத்தில் இருப்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. இதனால் கூடிய விரைவில் பிரதமர் மோடி கண்ணீர் சிந்துவார் எனவும் விமர்சித்துள்ளார்.