“பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக நாங்கள் உடைத்துள்ளோம்.!” ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!
பிரதமர் மோடி முன்பு இருந்தது போல இப்போது இல்லை. அவரை நாங்கள் உளவியல் ரீதியாக உடைத்துள்ளோம் என எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று காஷ்மீரில் உரையாற்றினார்.
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் (செப்டம்பர் 25) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று பூஞ்ச் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் ஆளும் பாஜகவை பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார்.
அவர் கூறுகையில், ” பிரதமர் மோடி தனது முந்தைய மனஉறுதியை இழந்துவிட்டர். இப்போது எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதே அவரது வேலையாக உள்ளது. மக்களுக்கு எதிராக அவர்கள் (பாஜக) ஒரு சட்டத்தை மக்களிடம் திணிக்க முயலும்போது, அதற்கு எதிராக நாம் உறுதியாக நின்றால் அவர்கள் பின்வாங்கி, வேறு ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு முன்பு இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. நரேந்திர மோடியின் உளவியலை நாங்கள் உடைத்துவிட்டோம்.
இந்தியாவில், யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக தரம் உயர்த்தப்பட்டதை நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால், வரலாற்றில் முதல் முறையாக, ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக தரம் தாழ்த்தப்பட்டுள்ளது. உங்கள் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே, உங்கள் மாநிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மை கோரிக்கை.
அவர்கள் (பாஜக) நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பிளவைத் தூண்டுகிறார்கள். அவர்களின் அரசியல், வெறுப்பு மூலமாக மட்டுமே வளர்கிறது. ஒரு பக்கம், முரண்பாட்டை விதைப்பவர்களாக அவர்கள் உள்ளனர். மறுபுறம், அன்பை விதைப்பவர்களாக நாங்கள் உள்ளோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மற்றும் மணிப்பூரிலிருந்து மகாராஷ்டிரா வரையிலான எங்கள் பயணம் செய்தபோது நாங்கள் கற்றுக்கொண்டது, ‘ வெறுப்பு யாருக்கும் பயனளிக்காது’ என்பது மட்டுமே.” என காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.