மகாபாரதத்தை குறிப்பிட்டு ராகுல் காந்தி பேச்சு.! நாடாளுமன்றத்தில் கடும் அமளி.!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். அவர் பேசுகையில், நாடு முழுக்க அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அந்த அச்சம் நம் நாட்டின் அனைத்து பக்கமும் பரவியுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நாட்டின் இளைஞர்களை பாதித்த மிகப்பெரிய பிரச்சினையாகும். ஆனால் அதுபற்றி நிதியமைச்சர் தனது உரையில் எதையும் குறிப்பிடவில்லை. சிறு வணிகங்களை கடுமையாகப் பாதித்துள்ள வரி பயங்கரவாத பிரச்சினையை பற்றியும் பட்ஜெட்டில் அமைச்சர் குறிப்பிடவில்லை.
மகாபாரத்தில் சக்கரவியூகத்தில் அபிமன்யூ சிக்கியுள்ளது போல, பிரதமர் மோடி மார்பில் அணிந்திருக்கும் தாமரை சின்னத்தில் குறிக்கப்படும் ‘சக்கரவியூகத்தில்’ இந்தியா சிக்கியுள்ளது. விரைவில் சக்கரவியூகம் உடைக்கப்படும்.
பிரதமர் மோடியின் பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினரை கத்தியால் குத்தியுள்ளது. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. அக்னிவீரர்கள் கூட பிரதமரின் சக்கரவியூகத்தில் சிக்கியுள்ளனர். அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லை. கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கல்விக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி பேசினார். ராகுல் காந்தி பேசுகையில் பாஜக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இருந்தும் தனது பேச்சை ராகுல் காந்தி தொடர்ந்தார். அம்பானி , அதானி பற்றி பேச ஆரம்பிக்கையில், அம்பானி அதானி பெயர்களை குறிப்பிட சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால், அவர்களை A1 , A2 என குறிப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்தார் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி.