“ராகுல் காந்தி ஓர் குழப்பவாதி., நாற்காலியை மட்டுமே துரத்துகிறார்.” கங்கனா சர்ச்சை பேச்சு.!
டெல்லி : காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒரு குழப்பம். இன்னும் அவர் தனது பாதையை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறார் என பாஜக எம்பி கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் அவ்வபோது தனது சர்ச்சை கருத்துக்களால் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிவிடுகிறார். சில சமயம் சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவிக்கும் நிலையில் இவரது கருத்துக்கள் அமைந்து விடுகிறது. அண்மையில் கூட விவசாயிகள் போராட்டத்தை வங்கதேச கலவரத்துடன் ஒப்பிட்டு பேசி சொந்த கட்சி தலைமையே கண்டனம் தெரிவித்தது. கங்கனா கூறியது கட்சி கருத்தல்ல அவரது சொந்த கருத்து என்று விளக்கம் கொடுக்கும் நிலையில் அமைந்துவிட்டது.
அதேபோல தற்போது காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பற்றி ஓர் கருத்தை கூறி மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார் பாஜக எம்.பி கங்கனா ரனாவத். இவர் நடித்த “எமெர்ஜென்சி” திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதற்கான பட விளம்பர நிகழ்ச்சிகளில் கங்கனா அவ்வப்போது கலந்து கொண்டு வருகிறார்.
அப்படி, இந்தியா டுடே பத்திரிகை நிறுவனத்திற்கு கங்கானா ரனாவத் பேட்டியளிக்கையில் ராகுல் காந்தி பற்றி பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். அவர் பேசுகையில், ” அவர் (ராகுல் காந்தி) ஒரு குழப்பம். எப்போதும் தனது பேச்சுகளிலும், நடத்தையிலும் ஒரு குழப்பமான நிலையிலேயே செயல்படுகிறார்.
ராகுல் காந்தி தனது இலக்கை நிர்ணயித்து அதனை அடைவதற்கு இன்னும் தனது சொந்த பாதையை அவர் தேர்வு செய்யவில்லை. அவர் இந்திரா காந்தியை விட மிகவும் வித்தியாசமான பாதையில் செயல்பட்டு வருகிறார். தனக்கு யார் தலைவர் என்ற உறுதியான நிலைப்பாடு அவருக்கு இல்லை. அவர் ஒரு நாற்காலியை மட்டுமே துரத்தி ஓடுகிறர். ஒவ்வொரு முறையும் அவர் தனது பாதையை மாற்றிக்கொண்டே இருக்கிறார். மூத்த காங்கிரஸ் தலைவர்களிடத்தில் இதுவரை எந்த ஒரு ஆலோசனையும் கேட்டதில்லை.
மக்களவை கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி அரசைப் பற்றி விமர்சனம் செய்ய, அவையில் சிவபெருமானின் புகைப்படத்தைப் பயன்படுத்தினார் ராகுல் காந்தி. அந்த சமயம் அவரை போதை மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நினைத்தேன். ” என்று ராகுல் காந்தி பற்றி பல்வேறு சர்ச்சை கருத்துக்களை நேர்காணலில் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.