“நான் மோடியை வெறுக்கவில்லை. ஆனால்.,” அமெரிக்காவில் இருந்து ராகுல் காந்தி…
பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை. ஆனால் அவர் கொண்டுள்ள கருத்தியல்களை நான் ஏற்கவில்லை என்று ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்கா : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தற்போது அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த நேர்காணலில் பங்கேற்ற ராகுல் காந்தி, இந்திய அரசியல் பற்றி பல்வேறு கருத்துக்களை கூறினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பற்றி கூறுகையில் , “பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை. ஆனால் அவர் கொண்டுள்ள கருத்தியலை நான் ஏற்கவில்லை. உண்மையில், அவர் மீது எனக்கு அனுதாபம் தான் ஏற்படுகிறது”, என்று கூறினார்.
மேலும், “பிரதமர் மோடிக்கு ஒரு கருத்து உள்ளது. அவருடைய கருத்துடன் நான் உடன்படவில்லை. ஆனால், நான் அவரை தனிப்பட்ட முறையில் வெறுக்கவில்லை. அவர் என் எதிரி என்று நான் நினைத்தது இல்லை. அவர் வாழ்ந்த, வளர்ந்த சூழ்நிலை பொறுத்து வேறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டுள்ளார். எனக்கு கிடைத்த அனுபவம் மூலம் வேறு கண்ணோட்டம் கிடைத்துள்ளது”, என்று ராகுல் காந்தி பிரதமர் மோடி பற்றி கூறினார்.
இதற்கு முன்னர் அவர் பேசுகையில், ‘மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜகவையும் , பிரதமர் மோடியையும் பார்த்து இந்திய மக்கள் யாரும் பயப்படவில்லை. பாஜகவினர் இந்தியாயவை ஒரே ஒரு கண்ணோட்டம் தான் ஆளுகிறது என நம்புகின்றனர். இந்தியா பன்முக தன்மை கொண்டது என்பதை நாங்கள் நம்புகிறோம்’ என்றும் பல்வேறு கருத்துக்களை ராகுல் காந்தி பேசி இருந்தார்.