“அதானியை கைது செய்ய வேண்டும்., மோடி பாதுகாக்கிறார்!” ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு!
தொழிலதிபர் அதானி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2000 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம், சர்வதேச முதலீடுகளை பெற அவர் முயற்சிப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதானி மீது வழக்கு தொடரபட்டுள்ளதால், இந்திய பங்குச்சந்தையில் அதானி பங்குகள் மற்றும் அதானி குழுமத்தின் மீது முதலீடு செய்துள்ள மற்ற நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவை கண்டுள்ளன. அதானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் கோடி வரையில் சரிவை சந்தித்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள அதானி மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பல்வேறு குற்றசாட்டுகளை இன்று முன்வைத்துள்ளார்.
அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ” திங்கள் கிழமை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி, அதானி விவகாரம் பற்றி குரல் எழுப்பும். பிரதமர் மற்றும் பாஜக அரசு அதானி குடும்பத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவதற்கு அவரது நிறுவனத்திற்கு பாஜக அரசு உதவி வருகிறது.
அமெரிக்காவின் சட்டம், இந்திய சட்டம் இரண்டையும் அதானி மீறி உள்ளார். இதனை அமெரிக்கா தெளிவாக கூறியுள்ளது. அவர் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆனால், இந்தியாவில் சுதந்திர மனிதனாக இயங்கி வருகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. நமது நாட்டில் முதலமைச்சர்கள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், ரூ.2000 கோடி ஊழல் செய்த அதானி இன்னும் சுதந்திரமாக இருக்கிறார். அவர் மீது எந்த விசாரணையும் இல்லை.
நாங்கள் இந்த குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம். செபி தலைவர் மாதாபி புச் மீது குற்றம் சாட்டியிருக்கிறோம். நாங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுகிறது. அதானியை பிரதமர் மோடி பாதுகாத்து வருகிறார். அதானியுடன் பிரதமர் மோடியும் ஊழலில் ஈடுபட்டுள்ளார். இது அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறிய குற்றச்சாட்டுகளில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதானி கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு பாதுகாவலராக இருக்கும் செபி தலைவன் நீக்கப்பட்டு வேறு ஒருவர் மீது நியமிக்கப்பட வேண்டும். அவர்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஆந்திரா, சத்தீஸ்கர், தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மின்சார விநியோகம் செய்ய அதானி நிறுவனங்களுடனான மின் இணைப்பு ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதானி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். முக்கிய நபர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து விசாரணை தொடங்க வேண்டும். அந்த விசாரணை அதானியிடம் இருந்து தொடங்க வேண்டும். ஒரு விதத்தில் அதானி இந்தியாவை கடத்திவிட்டார். நமது நாடு அதானியின் பிடியில் உள்ளது. இந்திய விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாதுகாப்பு துறை என அதானி – மோடி பார்ட்னர்ஷிப் ஒரு பக்கம் இருந்து கொண்டிருக்கிறது.” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் காட்டமாக விமர்சித்துள்ளார்.