இஸ்ரேல் – காசா போரை நிறுத்திய மோடியால் இதனை செய்ய முடியவில்லையா.? ராகுல் காந்தி விமர்சனம்.!
டெல்லி: கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், ராஜஸ்தானில் ஒரு நீட் தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்தது. 1500க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண்கள் 67 பேர் முழு மதிப்பெண்கள் என பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நீட் நுழைவுத்தேர்வு முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதில், இஸ்ரேல் – காசா போரை பிரதமர் மோடி நிறுத்தியதாக கூறுகிறார்கள். அப்படிப்பட்டவரால் ஏன் நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க முடியவில்லை. இல்லை அவர் அதனை தடுக்க விரும்பவில்லையா.?
கல்வி நிறுவனங்களை, துணை வேந்தர்களை பாஜகவினர் கைப்பற்றி உள்ளனர். பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் இந்த முறைகேடுகள் நடைபெறுகிறது. இதுபற்றிய விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
முன்னதாக உத்திர பிரதேச காவலர் தேர்வு முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வு ரத்து செய்யப்படுமா என்று தெரியவில்லை. இதற்கெல்லாம் யாரோ சிலர் காரணமாக உள்ளனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் நுழைவு தேர்வு மூலம் மிக பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது.
நீட் முறைகேடு ஒரு கல்வி பிரச்சனை, தேசிய பிரச்சனை, பொருளாதார பிரச்சனை ஆகும். கல்வி நிலையங்கள் பாஜகவுக்கு கீழ் இயங்கும் வரையில் இந்த நிலை மாறாது என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.