ஆம்ஸ்ட்ராங் படுகொலை., குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.! ராகுல் காந்தி இரங்கல்.!
டெல்லி: BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
நேற்று, சென்னையை அடுத்த பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக பொது இடத்தில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் , திருமாவளவன், தவெக தலைவர் விஜய் ஆகியோர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து இரங்கலை தெரிவித்து இருந்தனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தனது இரங்கல் செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது, மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சி ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன் என தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.