“மோடி அதனை செய்யமாட்டார்., அவரும் அதானியும் ஒன்று” ராகுல் காந்தி கடும் விமர்சனம்
அதானிக்கு எதிராக பிரதமர் மோடி விசாரணை செய்ய உத்தரவிட மாட்டார் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி : கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், அதானி விவகாரம் குறித்தும், மணிப்பூர் விவகாரம் , பெஞ்சல் புயல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதனை இரு அவை சபாநாயகர்களும் ஏற்க மறுப்பதாக கூறி எதிர்க்கட்சியினர் இரு அவைகளிலும், தொடர் அமளியிலும், வெளிநடப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ஒரு பகுதியாக இன்றும் அதானி விவகாரம் குறித்து பேச மறுப்பதாக கூறி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், ‘மோடியும் அதானியும் ஒன்று. அதானி பாதுகாப்பாக இருக்கிறார்’ என்று ஹிந்தியில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் மற்றும் உடைகளை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதானிக்கு எதிராக அமெரிக்க வழக்கறிஞர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து ராகுல் காந்தி செய்தியாளரிடம் கூறுகையில், ” அதானிக்கு எதிராக விசாரணை செய்ய மோடி உத்தரவிட மாட்டார். ஏனென்றால், அப்படி சொல்வதால் தன்னைத்தானே அவர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மோடியும், அதானியும் ஒன்று. ” என்று குற்றம் சாட்டியுள்ளார்.