மீண்டும் ஓர் நிர்பயா.! பெண்கள் பாதுகாப்பபு எங்கே.? ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

Congress MP Rahul Gandhi tweet about Kolkata Woman doctor death Issue

கொல்கத்தா : பெண் மருத்துவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் நாட்டில் நிலவுகிறது. ” என கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை சம்பவம் குறித்து ராகுல் காந்தி வேதனையுடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதுகலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவக் கல்லூரியில் உள்ள ஓர் கருத்தரங்கில் அரைநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.

பெண் பயிற்சி மருத்துவருக்கு கல்லூரி வளாகத்தின் உள்ளேயே நேர்ந்த இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.  கொல்கத்தா உயர்நீதிமன்றம் நேற்று அளித்த உத்தரவின்படி,  சிபிஐ இன்று முதல் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.

ராகுல் காந்தி கண்டனம் :

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ” கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு நேர்ந்த இந்த கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல் பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவருவதால், மருத்துவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டு வருவது, கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றால், பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி முன்வந்து படிக்க வைப்பார்கள் என்று இந்த சம்பவம் சிந்திக்கத் தூண்டுகிறது.

நிர்பயா (டெல்லி) வழக்குக்குப் பிறகு இயற்றப்பட்ட கடுமையான சட்டங்கள் கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் ஏன் தோல்வியடைந்தன? ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், கதுவா முதல் கொல்கத்தா வரையிலும் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்தும் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த தாங்க முடியாத வலியில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கக் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ” என்று ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி நிர்பயா :

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவச் சிகிச்சை பலனின்றி சில நாட்களில் உயிரிழந்தார். இந்த கொடூர குற்றவாளிகளுக்கு அப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு , கடந்த 2020இல் 4 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒருவர் சிறையில் உயிரிழந்தார். மற்றொரு 17 வயது சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்