நாளை வயநாடு விரையும் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி.!
வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று அதிகாலை 3 வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இந்த மீட்பு பணிகளில் மாநில மீட்புப்படையினர், தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வயநாடு நிலச்சரிவு குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்தார். மேலும், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய ராகுல் காந்தி, நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உடனடியாக உதவ வேண்டும் என்றும், நிவாரண தொகையை உயர்த்தி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், நிலச்சரிவால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் நாளை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாடு வரவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மீட்பு உதவிகளை தமிழக அரசு செய்து தரும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னர் அறிவித்து ,அதற்கென 5 கோடி ரூபாய் நிவாரண தொகையும் அறிவித்து இருந்தார். பிரதமர் மோடியும், வயநாடு நிலச்சரிவு குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்து, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.