குஜராத்தில் நடந்த ராகிங் கொடுமை! மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
முதலாம் ஆண்டு மாணவர்களை 3 மணி நேரம் நிற்க வைத்து ராகிங் செய்ததால் மயங்கி விழுந்து ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில் நட்வர்பாய் மெத்தானியா (18 வயது) முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும், அக்கல்லூரியின் விடுதியில் தங்கி தனது படிப்பை படித்துக் கொண்டு வருகிறார்.
இவரையும், இவருடன் சேர்த்து 10 மாணவர்களையும் கடந்த சனிக்கிழமை (நவ-15) அன்று அதே கல்லுரி விடுதியில் இருக்கும் சீனியர்கள் ஒரு சிலர் நிற்க வைத்து ராகிங் செய்துள்ளனர். வெகு நேரம், கிட்டத்தட்ட 3 மணி நேரம் நின்றதால் அனில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த மாணவரின் பெற்றோர் கூறுகையில், “எங்களுக்கு அனில் விடுதியில் மயங்கி விழுந்து விட்டார் என அழைப்பு வந்தது. ஆனால், கல்லுரிக்கு வந்தவுடன் அவர் உயிரிழந்து விட்டார் என கூறினார்கள்.
முதலாம் ஆண்டு மாணவர்களை 3-ஆம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்துள்ளதாகவும், அனில் 2-3 மணி நேரம் நிற்க வைக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம். அதனால் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரியவந்தது. எங்கள் மகனின் மரணம் குறித்து நியமான விசாரணையின் மூலம் நியாமான விளக்கம் வேண்டும்”, என்று அனிலின் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த மரணம் குறித்து அக்கல்லூரி நிர்வாகம் கூறுவது என்னவென்றால், “இந்த சம்பவம் குறித்து கல்லூரி ராகிங் தடுப்பு குழு விசாரணையை தொடங்கி இருக்கிறது. காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளோம்.
ராகிங் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்”, என தெரிவித்துள்ளது. மருத்துவர் ஆக வேண்டும் என கனவுடன் கல்லூரிக்கு பயில வந்த மாணவர் அனிலின் மரணம் அக்கல்லூரி வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.