ரஃபேல் ஜெட் வேகத்தையே மிஞ்சிவிட்டார் மகாராஷ்டிரா ஆளுநர் – எம்பி சஞ்சய் ராவத்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்தடுத்து நிலவி வரும் அரசியல் மாற்றங்கள் ஆளும் சிவசேனாவுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர்.
இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
“ஜெட் விமானத்தின் வேகத்தை விட கவர்னர் வேகமாக நகர்கிறார். ரஃபேல் ஜெட் கூட இவ்வளவு வேகமாக இல்லை” என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,பாரதிய ஜனதா கட்சியும், ஆளுநரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துடன் விளையாடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
“நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி நீதி கேட்போம். எம்.எல்.ஏ.க்கள் சுற்றுலா பயணத்தில் உள்ளனர். அவர்கள் கோவா செல்லட்டும். அவர்கள் மும்பை வந்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.