“சிக்கலில் மத்திய அரசு” “கிழிகிறது மோடி அரசின் முகத்திரை” வெடிக்கிறது ரபேல் ஊழல்..!!
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான குறுகிய காலத்தில் பிரான்சின் டசால்ட் நிறுவனம் மற்றும் அனில் அம்பானி குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனங்கள் இந்த விமான உற்பத்தியில் இணைந்து செயல்பட போவதாக அறிவித்தது.இது இந்திய அரசியலில் மத்திய அரசின் மீது சர்சையை கிளப்பியது.
இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ரபேல் ரக போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது தெளிவாக தெரிகிறது என்கிறார். இதற்கு வலுசேர்க்கும் விதமாக பிரான்சின் முன்னாள் அதிபர் பிரான்சுவா ஹாலண்டே ஒரு பேட்டியில் தெரிவித்த கருத்துஇருந்தது. அவரது பேட்டியில், “ரபேல் போர் விமான தயாரிப்புக்காக டசால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது, வேறு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை” என கூறியதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஊடகம்செய்தி வெளியிட்டுள்ளது.
இதை தொடர்ந்து இந்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் (எச்.ஏ.எல்) கூட்டு வைக்காமல் இத்துறையில் அனுபவமில்லாத அம்பானி குழும நிறுவனத்துடன் மோடி அரசு கூட்டு வைத்ததன் மூலம், ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் தலைமையிலான அரசு நிர்ணயம் செய்த விலையை காட்டிலும் அதிக விலைக்கு விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து இந்திய பாதுகாப்பு படையினர் மீது துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தி உள்ளார் என்றும் , நரேந்திர மோடி நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் ரத்தத்தை அவமதித்துள்ளார்” என பதிவிட்டு திட்டமிட்ட துல்லியமான தாக்குதலாக நடத்தியது பாஜக என்ற வார்த்தையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார் ராகுல் காந்தி . எதிர்க்கட்சிகள் குறிப்பாக இடதுசாரிகள் ரபேல் விமான கொள்முதலில் ஊழல் நடந்திருக்கிறது என நம்புகின்றனர். இதனை பாஜகவினை பலவீனப்படுத்தும் சரியான களமாக பயன்படுத்த முயல்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, “ரபேல் போர் விமான ஊழல் என்பது பாஜக அரசுக்கு மிகப்பெரிய சவால் எனவும், பாஜக அரசு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் இருந்து பாஜக அரசு தப்பித்துக் கொள்ள முடியாது” எனவும் கடுமையாக சாடியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விழுப்புரம் அருகே நடைப்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசும்போது, “உண்மையான பங்குதாரர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம்தான். இந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி யாரிடமும் கலந்தாலோசிக்காமல் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று விமானங்களை வாங்கிட அனில் அம்பானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திட துணைபோயிருக்கிறார்” எனவும் குறிப்பிடுவது அரசியல் களத்தில் முக்கியமாக கருதப்படுகிறது.
இதனைத்தான் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் ஊழல் எதிர்ப்பு போராளியாக அறியப்படுகின்ற பிரசாந்த் பூஷன், “இந்த ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தை அறிவிக்க பிரதமருக்கு அதிகாரம் இல்லை” என்று குறிப்பிடுகிறார். எந்த நிலையில் பார்த்தாலும் அரசியல் களத்தில் பாஜகவிற்கு எதிர் நிலையில் இருப்பவர்களுக்கு ரபேல் விமான கொள்முதல் வலுவான ஆயுதமாக வாய்த்திருக்கிறது என்பதுதான் உண்மை.
1980 களின் இறுதியில் அன்றைய தினம் பிரதமராக இருந்த ராஜிவ் காந்திக்கு ‘மிஸ்டர் க்ளீன்’ என்ற பிம்பம் இருந்தது. அந்த பிம்பம் உடைத்தெறியப்பட்டு காங்கிரஸ் மத்திய ஆட்சி கட்டிலிலிருந்து அகற்றப்படுவதற்கு ‘போபர்ஸ் பீரங்கி ஊழல்’ பலமான ஆயுதமாக எதிர்கட்சிகளால் பயன்படுத்தப்பட்டது. அன்றைய காங்கிரசின் வீழ்ச்சிக்கு போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சாரம் வெகுவாக அடித்தளமிட்டதை அரசியல் நோக்கர்கள் நினைவு கூறுகிறார்கள்.
அதைப்போல அன்றைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசின் காலத்தைய “ராணுவ வீரர்கள் சவப்பெட்டி ஊழல்” அவ்வரசிற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது என்பதையும் யாரும் மறந்துவிடவில்லை.
அதைப்போல வளர்ச்சி நாயகன் என்ற பிம்பத்தோடு வளம் வருகின்ற மோடியின் நம்பகத்தன்மையை மக்களிடையே சிதைக்கவும், பாஜக அரசை பெரிதும் பலவீனப்படுத்தவும் எதிர்க்கட்சிகள் முயல்கின்றன என்பதை எதிர்க்கட்சிகளின் எண்ண ஓட்டமும் செயல்பாடுகளும் தெளிவாக்குகின்றன.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டவாறு ரபேல் விமான ஊழல் பிரச்சாரத்தை மக்களிடையே வலுவாக கொண்டுசென்றால் 2019 ன் தொடக்கத்தில் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்திக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அப்படியொரு பின்னடைவு ஏற்பட்டால் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் காலகட்டத்தில் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு கடும் நெருக்கடியையும் பின்னடைவையும் அளித்துவிடும் என்றே அவர்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில் ஒருபுறம் வரிசெலுத்தக்கூடிய பொதுமக்கள், இன்னொரு புறம் எல்லையில் கடுமையான சூழலில் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள். ஆனால் இடையில் அரசியல் லாபமும் பொருளாதார பலனும் யாரோ அனுபவிக்கிறார்கள் என்று பொதுமக்களின் ஈனக்குரல் எங்கும் கேட்கிறது.
DINASUVADU