“ஒரு லிட்டர் கோமியம் ரூ.4க்கு கொள்முதல்” – புதிய திட்டத்தை தொடங்கியது சத்தீஸ்கர் அரசு!
பசுவின் ஒரு லிட்டர் கோமியம் ரூ.4க்கு கொள்முதல் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார் சத்தீஸ்கர் முதல்வர்.
கால்நடை விவசாயிகளிடமிருந்து பசுக்களின் கோமியத்தை கொள்முதல் செய்யும் திட்டத்தை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தொடங்கி வைத்தார். சத்தீஸ்கரின் உள்ளூர் திருவிழாவான ஹரேலி திஹாரை பண்டிகையை முன்னிட்டு, பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பசுவின் ஒரு லிட்டர் கோமியம் குறைந்தபட்சம் ரூ.4க்கு கொள்முதல் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ‘Godhan Nyay Yojana’ என்ற திட்டத்தின் கீழ் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பூபேஷ் பாகேல், 5 லிட்டர் பசு கோமியத்தைச் சுமார் 20 ரூபாய்க்கு சந்த்குரியின் நிதி சுயஉதவி குழுவிற்கு விற்பனை செய்தார். ஒரு லிட்டர் 4 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மாட்டுக் கோமியம் கொள்முதல் செய்யும் முதல் மாநிலமாகச் சத்தீஸ்கர் உருவெடுத்துள்ளது. மாட்டு சாணம் வாங்குவதை உள்ளடக்கிய ‘கோதன் நியாய யோஜனா’ என்ற திட்டம், கால்நடை வளர்ப்போர், இயற்கை விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது, ‘கோதன் நியாய யோஜனா’ என்ற இதே திட்டத்தின் கீழ் மாட்டு கோமியத்தை லிட்டருக்கு 4 ரூபாய்க்கு இம்மாநில அரசு கொள்முதல் செய்கிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு கோதன் நியாய் யோஜனா திட்டம் துவங்கும் போது விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் இருந்து மாட்டுச் சாணத்தைக் கொள்முதல் செய்யும் முதல் மாநிலமாக சத்தீஸ்கர் இருந்த நிலையில், தற்போது கோமியத்தையும் வாங்க முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு (கவுதன்) இடங்களில் மாட்டு கோமியம் கொள்முதல் செய்யப்படும். உள்ளூர் அளவில் மாட்டு கோமியம் விலையை நிர்ணயிக்க கவுதன் நிர்வாகக் குழுவுக்கு உரிமை உண்டு. இருப்பினும், வேளாண் மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலத்துறை ஒரு லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.4 வீதம் முன்மொழிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.