பஞ்சாப் மாநில ‘காங்கிரஸ் கமிட்டி தலைவர்’ பதவியை மீண்டும் தொடருவேன் – நவ்ஜோத் சிங் சித்து அறிவிப்பு!
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை முன்னதாக ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து,தற்போது தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுள்ளதாகவும்,பதவியை தொடரவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார்.அக்கடிதத்தில்,காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கை கருத்தில் கொண்டு அதன் நலனைக் காக்கும் வகையில் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில்,பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து இடையே ஏற்கனவே மோதல் போக்கு நீடித்து வந்தது.இதை சமாதானப்படுத்தும் நோக்கில் சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் விலகிய நிலையில்,பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார். அதன்பின்னர்,நவ்ஜோத் சிங் சித்து தற்போது தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில்,தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,சண்டிகரில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
“எனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுள்ளேன்.பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் தொடருவேன்.புதிய அட்டர்னி ஜெனரல் நியமிக்கப்படும் போது நான் பொறுப்பேற்பேன். நான் ராஜினாமா செய்தது தனிப்பட்ட ஈகோ அல்ல,மாறாக ஒவ்வொரு பஞ்சாபியின் நலனுக்காக ராஜினாமா செய்தேன்.
மேலும்,சரண்ஜித் சன்னியுடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. தனிப்பட்ட எதுவும் இல்லை.மாநிலத்துக்காக அவரிடம் பேசுகிறேன். மாநிலத்திற்கு செய்யக்கூடிய அனைத்து நன்மைகளுக்காகவும் அவரிடம் பேசுகிறேன். நான் என்ன செய்தாலும் பஞ்சாபுக்காகத்தான். நான் பஞ்சாப் சார்பாக நிற்கிறேன். பஞ்சாப் என் ஆன்மா. அதுதான் இலக்கு”,என்று தெரிவித்துள்ளார்.
“I have withdrawn my resignation (as Punjab Congress chief)” said Navjot Singh Sidhu in Chandigarh pic.twitter.com/Ob6NdHHXVT
— ANI (@ANI) November 5, 2021