பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முக்கிய அறிவிப்பு!
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ்க்கு 37 தொகுதிகளில் ஒதுக்கீடு செய்து பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 65 தொகுதிகளிலும், அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். மூன்றாவது கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) கட்சிக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) சீட் பங்கீடு ஒப்பந்தத்தை டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் நலன் கருதி மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன என்றார்.
காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி, தனது சொந்த அரசியல் கட்சியை தொடங்கிய அமரீந்தர், ஏற்கனவே 22 வேட்பாளர்களின் முதல் பட்டியலை அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் பாட்டியாலா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். 117 உறுப்பினர்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.