என்.ஆர் காங்கிரசுடன் இழுபறி.. புதுச்சேரியில் பாஜக ஆலோசனை..!
என்.ஆர் காங்கிரசுடன் கூட்டணி பேச்சு இழுபறியில் உள்ள நிலையில் தேர்தல் அறிக்கை பற்றி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியாக இணைந்து தேர்தலை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து விலக என்.ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் என்.ஆர் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்த பாஜக மேலிடம் முன்வராததால் என்.ஆர் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, நேற்று என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சந்தித்து பேசினார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மல் குமார், நாங்கள் என்.ஆர் காங்கிரஸ் உடனான கூட்டணியில் தான் உள்ளோம். இது வழக்கமான பேச்சுவார்த்தை தான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என கூறினார்.
இந்நிலையில், மேலிட பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மெக்வால் தலைமையில் புதுச்சேரியில் பாஜகவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்.ஆர் காங்கிரசுடன் கூட்டணி பேச்சு இழுபறியில் உள்ள நிலையில் தேர்தல் அறிக்கை பற்றி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.