புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்-செல்வகணபதி மனு தாக்கல்..!
பாஜக சார்பில் போட்டியிடும் செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான முனுசாமியிடம் செல்வகணபதி மனு தாக்கல் செய்தார்.
என்.ஆர். காங்கிரஸ் – பாஜக இடையே மாநிலங்களவை இடம் குறித்து இழுபறி நீடித்து வந்தது. பாஜகவிற்கு மாநிலங்களவை இடத்தை விட்டு தர மறுத்த முதல்வர் ரங்கசாமி திடீரென மாநிலங்களவை இடத்தை பாஜகவிற்கு நேற்று விட்டு கொடுத்தார். பாஜகவின் அழுத்தம் காரணமாக என்.ஆர். காங்கிரஸ் மாநிலங்களவை இடத்தை விட்டு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி மாநில பாஜக பொருளாளராக உள்ள செல்வகணபதி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். குறைவான எம்.எல்.ஏ.க்கள் கொண்ட பாஜகவுக்கு எம்.பி பதவியை விட்டுக் கொடுத்ததால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சபாநாயகர், அமைச்சர் பதவி வழங்குவதிலும் பாஜகவின் நெருக்கடிக்கு ரங்கசாமி பணிந்து சென்றதாக தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவையில் என்.ஆர். காங்கிரசுக்கு 10 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 6 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.