தடுப்பூசி போட்டால் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் – புதுச்சேரி ஆளுநர்!
தடுப்பூசி போட்டால் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற நிலையில், கொரோனாவை தடுக்க பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பல இடங்களில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இது வரை நாடு முழுவதும் 75 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் கட்டாயம் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில் அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது என்பதால், அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியது அவசியம் எனவும், உடல்நல பிரச்சனை காரணமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியாதவர்கள் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்தால் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.