விடுதலை நாள் கொண்டாடும் புதுச்சேரி., பிரெஞ்சுக்காரர்கள்., ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பின்னணி இதோ..,
1954, நவம்பர் 1ஆம் தேதி பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து விடுதலை பெற்ற நாளை புதுசேரி அரசு ஆண்டு தோறும் விடுதலை நாளாக கொண்டாடி வருகிறது.
புதுச்சேரி : 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய மண்ணைவிட்டு ஆங்கிலேயர்கள் சென்று இந்தியா விடுதலை பெற்ற தினமாகும். அதனால் ஆகஸ்ட் 15ஆம் தேதியை நாம் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் இந்த நாள் புதுச்சேரிக்கு மட்டும் மாறுபடும். நாம் ஆகஸ்ட் 15 கொண்டாடினால், அவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி தேசிய கொடியேற்றுவர். மேலும் நவம்பர் 1ஆம் தேதியை ஆண்டு தோறும் சுதந்திர தினமாக கொண்டாவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதற்கு பின்னால் சிறிய வரலாற்று பிண்ணனி உள்ளது. அதாவது, இந்தியா முழுக்க ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து வந்த சமயத்தில் இந்தியா முழுக்க அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வந்தன. ஆனால், பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி செய்து வந்த புதுச்சேரி மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட கேரளாவில் உள்ள மாஹே, ஆந்திராவில் உள்ள யானாம் ஆகியவற்றில் இந்த சுதந்திர போராட்டம் என்பது மிக தீவிரமாக இல்லை என்று கூறப்படுகிறது.
அதனால், 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டு செல்ல மறுத்துவிட்டனர். அதன் பிறகே தங்கள் விடுதலைக்காக இன்னும் பலமாக குரல் கொடுக்க ஆரம்பித்தனர் புதுச்சேரி மக்கள். அதற்க்கு இந்திய அரசாங்கமும் துணையாக செயல்பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பிரெஞ்சு அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பயனாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரெஞ்சு பிரதிநிதிகளிடம் புதுச்சேரி விடுதலை தொடர்பாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தம் 178 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில், 170 பேர் புதுச்சேரி விடுதலைக்கு ஆதரவு அளித்தனர். 8 பேர் மட்டுமே எதிராக வாக்களித்தால், புதுச்சேரிக்கு விடுதலை அளிக்க பிரெஞ்சுகாரர்கள் ஒப்புக்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக தான் 1954இல் நவம்பர் 1ஆம் தேதியன்று பிரெஞ்சுகாரகர்கள் புதுச்சேரிக்கு விடுதலை அளித்தனர். இதனால் நவம்பர் 1ஆம் தேதி ஆண்டு தோறும் புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாப்பட்டு வருகிறது. ஆனாலும், 2014க்கு முன்னர் வரையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி தான் புதுச்சேரி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வந்தது.
ஏனென்றால், பிரெஞ்சுக்காரர்கள் 1954, நவம்பர் 1இல் சுதந்திரம் அளித்தாலும், புதுச்சேரிக்கு சிறப்பு யூனியன் பிரதேச அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் 1962, ஆகஸ்ட் 16ஆம் தேதி தான் புதுசேரி யூனியன் பிரதேசம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அந்த நாளை தான் சுதந்திர தினமாக கொண்டாடி வந்தனர்.
இதனை தான் மாற்றி புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்த நவம்பர் 1ஆம் தேதியை 2014 முதல் புதுச்சேரி விடுதலை நாளாக புதுச்சேரி அரசு கொண்டாடி வருகிறது. அதன்படி, இன்று புதுச்சேரியில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு காவல்துறையினரின் அணிவகுப்பபை ஏற்றுக்கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.