புதுச்சேரி பட்ஜெட் 2024 : மீண்டும் ரேஷன் கடைகள்., உயர்த்தப்படும் மீனவர்கள் நிவாரணம்..,
புதுச்சேரி பட்ஜெட் 2024 : மத்திய பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு இன்று யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 2024-2025 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது
இந்த பட்ஜெட்டை புதுச்சேரி நிதித்துறையை கையாளும் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
2024 – 2025ஆம் நிதியாண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட்டிற்கு 12,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உள்நாட்டு நிதி வருவாய் ரூ.6,914 கோடி என்றும், மத்திய அரசு கொடுத்த நிதி ரூ.3,268 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை போக்குவதற்கு ரூ.2,066 கோடி கடன் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி குறிப்பிடுகையில், புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் இந்தாண்டு முதல் திறக்கப்படும் என்றும், அதன் மூலம் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிய முக்கிய சமையல் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், பெயர் சேர்த்தல் , பெயர் நீக்குதல் உள்ளிட்ட ரேஷன் கார்டு தொடர்பான விண்ணப்பங்களுக்கு இ சேவை மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 6,500 ரூபாயில் இருந்து 8,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மழைக்கால நிவாரணத் தொகை 3000 ரூபாயில் இருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் பழமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும். புதுச்சேரியில் ஏற்கனவே உள்ள பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் ஆகியவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி பிராந்திய அளவில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.20,000, ரூ.15,000 மற்றும் ரூ.10,000 அளவில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பாடப்பிரிவு வாரியாக முழு மதிப்பெண் பெறும் மாணவர்களுக்க 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்டும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.