ஆளுநருடன் புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு..!
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் பாஜக எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் யார் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. மாநிலங்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே தொடர் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், நேரு உள்ளிட்டோர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சந்தித்து அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.