புதுச்சேரி : ஆல் பாஸ் முறை ரத்து! அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!
மத்திய அரசின் உத்தரவை ஏற்று புதுச்சேரியில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வழக்கமாக நடைமுறையில் இருக்கும் 1-8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற நடைமுறையை கொண்டு வந்துள்ளதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு வந்ததை தொடர்ந்து உடனடியாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருந்தார். அதில் “மத்திய கல்வி அமைச்சகம் கொண்டு வந்த மாணவர்கள் தேர்ச்சி விதிமுறை திருத்தம், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி வரும் மாநிலங்களுக்கும், நவொதயா மற்றும் கேந்திரா வித்யாலயா பள்ளிகள், சைனிக் பள்ளிகளில் இந்த விதிமுறை பொருந்தும், தேசிய கல்வி கொள்கையை ஏற்காத தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இந்த விதிமுறை பொருந்தாது என தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், மத்திய அரசின் உத்தரவை ஏற்று புதுச்சேரியில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ” மாணவர்களின் கல்வி திறனை அதிகப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் தான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. அதனால் தான் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
மத்திய கல்வி திட்டத்தில் தான் புதுவை உள்ளது. எனவே, மத்திய கல்வி திட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் வந்தாலும் அது புதுவைக்கு பொருத்தும். எனவே, அதனை ஏற்று புதுவை மாநிலம் அதனை செய்யப்டுத்தும்.
புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டமே உள்ளது. மத்திய அரசின் உத்தரவு அதற்கும் பொருந்தும். முதல்வருடன் பேசி ஆலோசனை நடத்திய பிறகு விவரமாக தெரிவிக்கப்படும் எனவும்” அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். எனவே, இனிமேல் புதுச்சேரியில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்லமுடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.