வாக்குக்கு பணம்… நான் தேர்தலை புறக்கணிக்கிறேன்.. கொந்தளித்த அதிமுக வேட்பாளர்!

Tamilventhan

Election2024: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்படுவதாக புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் குற்றச்சாட்டு.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் தமிழ்வேந்தன் கூறியதாவது, நான் ஒரு இளைஞனாக வாக்குக்கு பணம் கொடுக்காமல் நேர்மையாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று கூறி தான் அதிமுக சார்பில் புதுச்சேரியில் தொகுதியில் களமிறங்கி உள்ளேன்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பாஜகவை சேர்ந்த வேட்பாளர் நமச்சிவாயம் ஒரு வாக்குக்கு 500 ரூபாயும், அதேபோல் காங்கிரேஸை சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரான வைத்திலிங்கம் ஆகியோர் ஒரு வாக்குக்கு 200 ரூபாயும் கொடுத்துள்ளார்கள். வாக்குக்கு பணம் கொடுத்து மீண்டும் ஏழை மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த தேர்தலை மாற்றிவிட்டனர்.

இந்த தேர்தல் என்பது நேர்மையாக நடைபெற வேண்டிய தேர்தல். இது இளைஞர்களுக்கு, பெண்களுக்கும் மற்றும் அடுத்த தலைமுறைக்கும் நாம் வழிவிட வேண்டிய தேர்தல். ஆனால் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி பணம் கொடுத்துதான் வெற்றி பெறுவேன், அவர்களின் ரத்தத்தை குடித்துதான் வாழ்வேன் என்று நினைத்தீங்க என்றால் நான் இந்த தேர்தலையே புறக்கணிக்கிறேன் என ஆவேசமாக தெரிவித்தார்.

புதுச்சேரியில் தேர்தல் நேர்மையாக நடைபெறாததால் இந்த தேர்தலையே புறக்கணிக்கின்றேன். இந்த தேர்தலை உடனடியாக தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். ஒட்டுக்கு பணம் கொடுப்பது தவறு, ஒரு இளைஞனாக நானும் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அடுத்து வரும் தலைமுறைகள் எப்படி முன்னேறும். ஏழைகள் எப்படி முன்னேற முடியும், கல்விக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க முடியும்.

எல்லாருமே மீண்டும் மீண்டும் வாக்குக்கு பணம் கொடுத்து தவறு செய்தால் இந்த நாடு, நமது மாநிலம் எப்படி முன்னேறும் என கொந்தளித்து பேசினார். மேலும் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை அவர்களை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். இது தொடர்பாக புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்த தேர்தலை ரத்து செய்ய கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பேன் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்