கர்நாடகாவில் வருகின்ற ஜூலை 30,31 இல் துவங்கவுள்ள பொது நுழைவு தேர்வு!
கர்நாடக மாநிலத்தின் பொது நுழைவுத் தேர்வு ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாகவே எஸ்எஸ்எல்சி தேர்வு நடக்கும் பொழுதே பொது நுழைவுத் தேர்வையும் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துணை முதல்வரும் உயர் கல்வி அமைச்சருமான டாக்டர் அஸ்வத் நாராயணன் அவர்கள் கூறியிருந்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் தற்பொழுது வருகின்ற ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 497 மையங்களிலும் 120 இடங்களிலும் 1.95 லட்சம் மாணவர்கள் இந்த பொது நுழைவுத் தேர்வை எழுத உள்ளார்கள் என்று ஒரு அறிக்கையில் நாராயணன் குறிப்பிட்டிருந்தார். மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நான்கு நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கான அறிகுறியுள்ள மாணவர்களுக்கும், தனி அறை கொடுத்து தேர்வு எழுத அனுமதிக்கபடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். அனைத்து சோதனைகள் உடன் கூடிய தேர்வு எழுதுவதால் மாணவர்கள் பீதி அடைய தேவையில்லை எனவும் சமூக இடைவெளிகளை கடைபிடித்து அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களுடன் கலந்துகொண்டு தேர்வுகளை நன்முறையில் எழுதி செல்லலாம் எனவும் டாக்டர் நாராயணன் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.