விண்ணில் பாய தயாரான பிஎஸ்எல்வி சி60! உலக சாதனைக்கு காத்திருக்கும் இஸ்ரோ!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் 2 செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா : இஸ்ரோ இன்று இரவு ஒரு மகத்தான சாதனையின் தொடக்கத்தை செயல்படுத்த உள்ளது. ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் பிஎஸ்எல்வி சி60 ரக ராக்கெட் ஏவப்பட உள்ளது.
செயற்கைகோள் இணைப்பு சோதனைக்காக (Space Docking Experiment) SDX01 மற்றும் SDX02 எனும் இரு செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து செல்கிறது. இணைப்பு சோதனை என்பது, விண்வெளியில் இருக்கும் ஒரு செயற்கைகொளுடன் இன்னொரு செயற்கைகோளை இணைக்கும் செயல்முறையாகும். இதன் மூலம் இந்த செயற்கோளில் உள்ளவர்களை அங்கு அனுப்ப முடியும். அங்கு இருப்பவர்களை இங்கு அழைத்து வர முடியும்.
இந்த இணைப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்த நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் உள்ளன. அதற்கு அடுத்து உலக அரங்கில் விண்வெளி செயற்கைகோள் இணைப்பை மேற்கொண்ட 4வது நாடாக இந்தியா இடம்பெறும் என கூறப்படுகிறது.
இன்று இரவு சரியாக 9.58 மணிக்கு பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்டானது SDX01 மற்றும் SDX02 ஆகிய செயற்கைக்கோள்களை சுமந்து விண்ணில் பாய உள்ளது. இதற்கான 25 மணிநேர கவுன்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.
SDX01 செயற்கைகோள் துரத்தும் செயற்கைகோளாகவும், SDX02 டார்கெட் செயற்கைகோளாகவும் உள்ளது. விண்ணில் 20 கிமீ தூரத்தில் வெவ்வேறு திசையில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கைகோள்கள் அடுத்த 10 நாட்களில் இணைப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு செயற்கைக்கோளும் தலா 220 கிலோ எடை கொண்டதாகும்.