PSLV C-54 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! அடுத்தாண்டு ஆதித்யா – இஸ்ரோ அறிவிப்பு
பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தும்.
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.58 மணிக்கு பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஓசன்சாட் 03 என்ற புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது. இதில் அமெரிக்காவின் 4, பூடானின் 2 ஆகிய செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6 உள்ளிட்டவை வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டது. கடல் மற்றும் கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வேறுபாடுகளை கண்காணிக்க புவிநோக்கு செயற்கைகோள் உதவும் எனவும் தகவல் கூறப்பட்டிருந்தது. இதன்பின், பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது என விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டு தெரிவித்திருந்தார்.
ராக்கெட் திட்டமிட்டபடி சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றும் புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6, 8 நானோ செயற்கைகோள்கள் என மொத்தம் 9 செயற்கைகோள்களை ஒவ்வொன்றாக பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் நிலைநிறுத்தி வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருந்தார்.
மேலும் சில பணிகள் பூர்த்தியடை வேண்டியுள்ளது குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இஸ்ரோ விண்ணில் ஏவிய பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைகோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தியது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு ஆதித்யா செயற்கைகோள் ஏவப்படும், நேபாளம், பூடான், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.