இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி-59 ராக்கெட் ஏவுதல்!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக PSLV-C59 ராக்கெட் ஏவுதல் நாளை மாலை 4.12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம்: PSLV C-59 ராக்கெட் ஏவுதல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளமான, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று (டிச.4) மாலை 4.08க்கு மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது.
ஆனால், திடீரென கடைசி நேரத்தில், PROBA-3 சாட்டிலைட்டில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் PSLV C-59 ராக்கெட் ஏவுதல் நாளை மாலை 4.12க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ (ISRO) அறிவித்துள்ளது.
Due to an anomaly detected in PROBA-3 spacecraft PSLV-C59/PROBA-3 launch rescheduled to tomorrow at 16:12 hours.
— ISRO (@isro) December 4, 2024
இந்த ஏவுகணை மூலம், 61-வது பிஎஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ அனுப்ப உள்ளது. புவியிலிருந்து 65,500 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படவுள்ள ‘Proba-3’ சாட்டிலைட் சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு செய்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆம், சூரியனை ஆராய்வதற்காக புரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்துள்ளது. 550 கிலோ எடை கொண்ட ‘புரோபா-3’ செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை வெற்றி பெற்ற பிறகு மேலும் பல வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் நம்மால் ஏவப்படும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கான கவுன்ட் டவுன் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.38 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4.08 மணிக்கு ஏவப்பட இருந் நிலையில், நாளை மாலை 4.12க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.