சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை
சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், சச்சின் பைலட் ,முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்.
எனவே முதலமைச்சர் அசோக் கெலாட் வீட்டில் சட்டசபைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா மகேஷ் ஜோஷி உத்தரவு பிறப்பித்தார்.ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவருடைய ஆதரவு 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். மேலும் அமைச்சர் பதவியிலிருந்து, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரும் நீக்கப்பட்டனர்.
இதனால் சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சிபி ஜோஷி கடந்த செவ்வாய்க்கிழமை தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். இதற்குஇடையில் .சபாநாயகர் சி.பி. ஜோஷியின் தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது 18 ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ. க்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் வருகின்ற செவ்வாய் கிழமை வரை நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.