போலி மருந்து உற்பத்தி..! 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து.!
இந்தியாவில் போலி மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலி மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள 20 மாநிலங்களில் இயங்கிவரும் 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் மத்திய மற்றும் மாநில குழுக்கள் ஆய்வு நடத்தியது.
இந்த திடீர் சோதனையில் ஜிஎம்பி (GMP) வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத நிறுவனங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடவடிக்கை எடுக்கப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், இமாச்சலப் பிரதேசத்தின் பாடியைச் சேர்ந்த ஸ்ரீ சாய் பாலாஜி பார்மடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஷோகாஸ் மற்றும் உற்பத்தி நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், ஏதென்ஸ் லைஃப் சயின்சஸ், லேபரேட் பார்மாசூட்டிகல்ஸ் இந்தியா லிமிடெட் ஜி என்பி மருத்துவ ஆய்வகம் உள்ளிட்ட மருந்து நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
இதையடுத்து மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் குறிப்பிட்ட விதிகள் படி தயாரிக்கப்பட வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலி மருந்துகளை தயாரிப்பது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மருந்து நிறுவனங்கள் மீது பெரிய அளவில் சோதனைகள் இன்னும் நடந்து வருகிறது.