ரயில் பயணத்தின் போது பிரச்சினையா .? ‘ரயில் மதாத்’ செயலி மூலம் அரை மணி நேரத்தில் உடனடி தீர்வு.!
ரயில் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ‘ரயில் மதாத்’ செயலி மூலம் 37 நிமிடத்தில் தீர்வு :
சென்னை : ரயில் பயணத்தின் போது சந்திக்கும் பலவித பிரச்சனைகளுக்கு ரயில் மதாத் செயலி மூலம் 37 நிமிடத்தில் தீர்வு வழங்கப்படுகிறது. இதில் 75,613 பயணிகள் பயனடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் மதாத் செயலி அறிமுகம் :
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே சமூகப் பொறுப்புகளுடன் பயணிகளுக்கு தடையற்ற சேவை அழிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பயணிகளின் குறைகளை தீர்ப்பதையும் தனது கடமையாக செய்து வருகிறது எனக் கூறியது. கடந்த 2019 ஆம் ஆண்டு, பயணிகள் தங்கள் பயணத்தின் போது சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண ரயில் மதாத் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் குறுஞ்செய்தி தொலைபேசி சமூக ஊடகம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் பயணிகளின் குறைகள் கண்டறியப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.
பிரச்சனைகளுக்கு தீர்வுகள் :
தெற்கு ரயில்வேயின் கட்டணமில்லா அலைபேசி எண் 139 மூலம் 61 சதவீத குறைகளும், ரயில் மதாத் இணையதளம் மூலம் 21 சதவீத குறைகளும், சமூக ஊடகங்கள் மூலம் 10 சதவீத குறைகளும், ரயில் மதாத் செயலி மூலம் 5 சதவீத குறைகளும், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் 3 சதவீத குறைகள் பெறப்பட்டு தீா்வு காணப்படுகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ரயில் மதாத் இணையம் மற்றும் செயலி மூலம் 37 நிமிஷங்களில் பயணிகள் குறைகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது.
2019-20 நிதியாண்டில் 100 சதவீத பயணிகளின் குறைகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மேலும், குறைகளை பதிவு செய்த முதல் 8 நிமிஷங்களில் பயணிகளைத் தொடா்பு கொண்டு குறைகள் தீா்க்கப்படுகின்றன. இந்த முதல் 8 நிமிடம் மருத்துவ மற்றும் பாதுகாப்பு உதவிகளுக்கு பேருதவியாக உள்ளது. 2022-23 நிதியாண்டில் (ஜனவரி வரை) 75,613 பயணிகள் குறைகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.