வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.!
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட பிரியங்கா காந்தி தற்போது வேட்புமனு தாக்கல் செய்தார்.
வயநாடு : நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெற்றிபெற்றார். அதே போல உ.பி ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
இதனை அடுத்து, ஜார்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலோடு வயநாடு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முதல் முறையாக களமிறங்குகிறார் பிரியங்கா காந்தி. இதுவரை காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்திலும், கட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்த பிரியங்கா காந்தி தற்போது முதன் முறையாக தேர்தல் அரசியலில் களமிறங்கியுள்ளார். இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தனது சகோதரி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதை அடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் இன்று வயநாடு வந்திறங்கினார். வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி ஆகியோர் ரோட்ஷோவில் ஈடுபட்டனர். கல்பெட்டா பேருந்து நிலையத்திலிருந்து, வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்ற வாகன பேரணி முடிந்த பிறகு பரப்புரை கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்றார்
அதில் பேசிய பிரியங்கா காந்தி, “நான் பலமுறை எங்கள் கட்சியினருக்காக வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். முத்த முறையாக எனக்காக வாய்ப்பு கேட்டு வந்துள்ளேன். நான் 7 வயதில் எனது தந்தைக்காக வாக்கு சேகரித்தேன். தற்போது உங்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என உரையாற்றினார். அதன் பிறகு வயநாடு தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை அளித்தார் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி.