பிபிஇ பாதுகாப்பு உடைக்கு ரூ. 96,000-ஐ கட்டணமாக வசூலித்த தனியார் ஹாஸ்பிடல்.! ஷாக்காகிய கொரோனா நோயாளி.!
கொரோனா நோயாளி அணியும் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடைக்கு ரூ. 96,000-ஐ கட்டணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வசூலித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கட்டணம் அதிகம் வசூல் செய்து வருகின்றனர். அதற்காக பலர் புகார் அளித்தும் குற்றச்சாட்டுகள் கூறியும் வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளி அணியும் பிபிஇ என்ற பாதுகாப்பு கவச உடைக்கு ரூ. 96,000 கட்டணம் விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 13-ம் தேதி 52 வயதான ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனையடுத்து 12 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் ஜூலை 25-ம் தேதி வீடு திரும்பிய அவரது மருத்துவ கட்டணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த மனிதரின் 12 நாட்களுக்கு மருத்துவ கட்டணமாக ரூ. 3,62,982 விதிக்கப்பட்டிருந்தது. அதில் பிபிஇ கிட்டிற்கு மட்டும் ரூ. 96,000 கட்டணமாக வாங்கியுள்ளனர். இந்த தனியார் மருத்துவமனையின் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தன்னார்வலர் விஜய கோபால், மருத்துவமனைக்கு எதிராக பொது சுகாதார துறையில் புகார் அளித்துள்ளார். மற்ற மருத்துவமனைகளில் பிபிஇ பாதுகாப்பு உடைக்கு ரூ. 8 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.