3வது முறையாக வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி.!
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி தொகுதியில் 3வதுமுறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, 2014 மற்றும் 2019 ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்த உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் இந்த முறை மீண்டும் போட்டியிட உள்ளார் என பாஜக தலைமை முன்னதாக அறிவித்து இருந்தது.
இதனை அடுத்து இன்று வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நேற்று வாராணசிக்கு வருகை புரிந்தார். அதன் பிறகு அங்கு பிரமாண்ட வாகன பேரணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, கங்கை ஆற்றங்கரையில் உள்ள தச அஸ்வமேத காட் பகுதியில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பின்னர் காசி கோட்வால் பாபா காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார்.
அதனை அடுத்து, பாஜக தொண்டர்களோடு, மாபெரும் பேரணியாக தேர்தல் அலுவலகம் சென்ற பிரதமர் மோடி, வாரணாசி மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் வேட்புமனு தாக்கலின் போது உடன் இருந்தனர். வாரணாசி தொகுதியில் கடைசிகட்ட வாக்குப்பதிவு நாளான ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2019 தேர்தலில் 63.62 சதவீத வாக்குக்களும், 2014 மக்களவை தேர்தலில் 56.37 சதவீத வாக்குகளும் பெற்று வாரணாசியில் மிகப்பெரிய வெற்றிகளை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.