4-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து…!
வங்கதேச பிரதமராக பொறுப்பேற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வந்ததால் பாதுகாப்பிற்க்காக சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மொத்தமுள்ள 300 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைமையிலான கூட்டணி 288 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. முதன்மையான எதிர்க்கட்சியான வங்கதேசத் தேசியக் கட்சி 6 இடங்களில் வெற்றிபெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஹெலால் உத்தீன் அகமது தெரிவித்தார்.
இந்நிலையில் நான்காவது முறையாக வங்கதேச பிரதமராக பொறுப்பேற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஆளும்கட்சியின் முன்னேற்றகரமான திட்டங்கள் தொடர வேண்டும் என உங்கள் நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளனர். வங்காளதேசத்துக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.