தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் அகற்றம்…! சத்தீஸ்கர் அரசு அதிரடி…!
சத்தீஸ்கர் அரசு சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக, சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பஹால் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், தடுப்பூசி போட்டபின் வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறுவதுண்டு. இது குறித்து பல்வேறு சர்ச்சையான பேச்சுகள் எழுந்த போதும், மத்திய அரசு சார்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மக்களுக்கு போதுமான தடுப்பூசியை, மத்திய அரசால் வழங்க இயலாத காரணத்தால் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் மூலமாக தாங்களாகவே தடுப்பூசிகளை வாங்கி மக்களுக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன் பதிவினை செய்ய, கோவில் இணையதளத்தை மத்திய அரசு ஆரம்பித்தது. அது போல ‘சி ஜி டீக்கா’ என்ற பெயரில் சத்தீஸ்கர் அரசு தனியாக ஒரு இணைய பக்கத்தை உருவாக்கி 18 வயது முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி முன்பதிவு மேற்கொண்டு வருகிறது. இந்த இணையத்தில் பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு, சத்தீஸ்கர் அரசு சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக, சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பஹால் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கூறுகையில், யாருடைய புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற போட்டி போட வேண்டிய நேரம் இது கிடையாது. இதன் மூலம் விளம்பரங்களை தேடும் சத்தீஸ்கர் அரசு உடனடியாக தங்களது இதுபோன்ற நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்த சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், டி.எஸ்.சிங்தியோ 18 வயது முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நிதியினை மாநில அரசு கொடுக்கிறது. மத்திய அரசு பணம் கொடுக்கும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறும்போது, மாநில அரசு செலவு செய்யும் சான்றிதழில் முதல்வர் படம் ஏன் இருக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.