மாநிலங்களவையில் சீறிய மோடி… நேரு, இந்திரா காந்தி முதல் சமஸ்கிருதம் வரையில்..
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாநிலங்களவையில் குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் மீது சரமாரி விமர்சனங்களை முன்வைத்து பேசினார். மேலும், மற்ற எதிர்க்கட்சிகளையும் நீங்கள் ஏன் காங்கிரஸ் பக்கம் நிற்கிறீர்கள் என்பன வாறு தனது விமர்சனத்தை முன்வைத்து தனது பேச்சை தொடர்ந்தார். அதில் சில முக்கிய குறிப்புகளை மட்டும் இதில் பார்க்கலாம்…
பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முன் இல்லாத அளவிற்கு நேற்று மாநிலங்களவையில் மிகவும் ஆவேசமாக தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார். கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்றம் ஆனது பட்ஜெட் தாக்கல் கூட்டத்திற்காக தொடங்கியது. அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அதன்பிறகு பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர் அமளி : அதற்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற கேள்வி நேர விவாத கூட்டத்தில் 2, 3, 4 ஆகிய நாட்களில் நாடாளுமன்ற கூட்ட தொடர் அமளியின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி பற்றி பேசியிருந்தார். நேற்று மாநிலங்களவையில் உரையாற்றினார். இரண்டு நாட்களும் எதிர்கட்சினர் எழுப்பிய அதானி விவகாரம் குறித்து எந்த பதிலையும் அவர் அளிக்கவில்லை . அதனை தவிர்த்து தான் பிரதமர் மோடி தனது உரையை ஆற்றினார்.
தாமரை மலரும் : பிரதமர் மோடி நேற்று பேச தொடங்கும் போதே, எதிர்க்கட்சியினர் அதானி விவரம் குறித்து விவாதம் நடத்த அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேச தொடங்கிய பிரதமர் மோடி, நீங்கள் வீசி எறிந்த அனைத்து சேற்றில் இருந்தும் தாமரை மலர்ந்தே தீரும். என பேச தொடங்கினார்.
நிரந்தர தீர்வு : நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்களின் நடவடிக்கை மற்றும் உரைகள் தனக்கு ஏமாற்றம் அளித்ததாகவும் அவர்கள் எந்த திட்டத்தையும் அதன் உள்நோக்கத்தோடு புரிந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டு இருந்தார். காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவு தோல்விகளை கண்டாலும் தங்கள் தவறை உணரவில்லை எனவும் தனது விமர்சனத்தை முன்வைத்தார். நாட்டின் பிரச்சனைகளுக்கு நாங்கள் நிரந்தர தீர்வுகளை கண்டு வருகிறோம். என பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசி இருந்தார்.
சட்டம் 354 : காங்கிரஸ் அரசு இந்திய சட்டம் 354ஐ தவறாக பயன்படுத்தி பல மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்துஅல்து என குற்றசாட்டை முன்வைத்தார். இதுவரையில் 90 முறை காங்கிரஸ் கட்சியானது ஆட்சி பொறுப்பில் இருந்து மாநில அரசுகளின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்துள்ளது. இதில் 50 முறை மாநில ஆட்சியை டிஸ்மிஸ் செய்து அரை சதம் அடித்தவர் இந்திரா காந்தி என மிகவும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தபோது, அந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்தவர் இந்திரா காந்தி. ஆனால், அதே காங்கிரஸ் கட்சியுடன் தான் தற்போது திமுக கூட்டணி வைத்துள்ளது என்றும், எம்ஜிஆர் ஆட்சியையும் காங்கிரஸ் கலைத்து உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஆட்சி டிஸ்மிஸ் : அடுத்ததாக, ஆந்திராவில் முதல்வர் என்.டி.ராமராவ் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்ற சமயம், மத்தியில் இருந்த காங்கிரஸ் அவரது ஆட்சியையும் டிஸ்மிஸ் செய்தது என்றும், கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சி அமைந்த போது அந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்தவர் அப்போதைய பிரதமர் நேரு என குறிப்பிட்டு தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
பிரதமர் மோடி பெருமிதம் : மேலும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்ததை விட பல பல மடங்கு தற்போது நல்லது நடைபெற்று வருகிறது. பழங்குடியின மக்கள், பட்டியல் இனத்தவர்கள் என அனைவருக்கும் பாஜக ஆட்சியில் நல்லது நடைபெற்று வருகிறது. என குறிப்பிட்டார். தற்போது வரை நான் மக்களுக்காகவே நிற்கிறேன். என்னை எதிர்க்க எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பாருங்கள் என்று காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை குறிப்பிட்டு பேசினார்.
குடும்ப பெயர் : தங்களது சொந்த லாபத்திற்காக மகாத்மா காந்தியின் பெயரை பயன்படுத்தி கொண்டவர்கள் குடும்ப பெயரில் நேருவின் பெயரை ஏன் மறுத்தார்கள் எனவும் எனக்கு புரியவில்லை. நேருவின் பெயரை பின்னால் வைத்து கொள்வதற்கு என்ன பயமா என வும் விமர்சனம் செய்தார்.
சமஸ்கிருதம் : சிலருக்கு அரசு திட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது பிரச்சனையாக இருக்கிறது. ஆனால், கடந்த அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு நேரு குடும்பத்தின் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளன என்று ஒரு ஆய்வு குறிப்பு கூறுகிறது என்றார். என இதுவரையில் இல்லாத அளவுக்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி நேற்று தனது காட்டமான விமர்சனத்தை காங்கிரஸ் கட்சி மீதும், மற்ற எதிர்கட்சியினர் மீதும் சுமத்தி இருந்தார்.