ஜூன் 20 முதல் 25 வரை அமெரிக்கா, எகிப்து நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்.!
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 முதல் 25 வரை அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரசுப்பயணம் செல்ல உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 20 ஆம் தேதி புறப்பட்டு அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஜூன் 25 ஆம் தேதி வரை அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இதில் முதலாவது பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் வரும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொள்கிறார்.
கடந்த டிசம்பர் 2014 இல் ஐநா பொதுச் சபையால் அறிவிக்கப்பட்ட பின் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஜூன் 22 ஆம் தேதி அதிபர் பைடன் மற்றும் ஜில் பைடன் அழைப்பின்பேரில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அரசு விருந்திலும் மோடி பங்கேற்கிறார்.
அதன்பிறகு ஜூன் 23ம் தேதி துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் இணைந்து பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கவுள்ளனர். இது தவிர பிரதமர் மோடி, முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் சந்திக்கவுள்ளார்.
புலம்பெயர்ந்த இந்தியர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றுகிறார். இதனை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, ஜூன் 24-25 தேதிகளில் எகிப்துக்கு அரசுமுறை பயணமாக கெய்ரோ செல்கிறார். கடந்த 2023 ஜனவரியில் இந்தியாவில் நடைபெற்ற குடியரசு தின சிறப்பு விழாவில் விருந்தினராக கலந்துகொண்ட ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இது பிரதமர் மோடிக்கு முதல் எகிப்து பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் தனது பயணத்தின் போது, ஜனாதிபதி சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். எகிப்தில் உள்ள இந்திய சமூகத்தையும் சந்தித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.