மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் – பிரதமர் மோடி.!
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நாளை (ஜூலை 23) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா முழுபட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்தக் கூட்டங்களில் 6 மசோதாக்களை அரசு ஒப்புதலுக்குக் கொண்டுவரும் என கூறப்படுகிறது. அதேநேரம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ரயில் விபத்துகள், மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி அளித்தார். “நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் சிறப்பானதாக இருக்கும், வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும். ‘2047-ல் வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கை அடையும் நோக்கில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏழை, விவசாயிகள், பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம். மக்களின் வளர்ச்சிக்காக எவ்வளவு போராட முடியுமோ, அவ்வளவு போராடி சிறப்பான ஆட்சியை தருகிறோம்.
மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் .நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். தனது அரசியல் பயணத்தில் இன்று மிகவும் முக்கியமான நாள், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என எதிர்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.