நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களுடன் இன்று பேசுகிறார் பிரதமர் மோடி!
டெல்லி:நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களுடன் மத்திய பட்ஜெட் குறித்து இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி பேசுகிறார்.
கடந்த ஜனவரி 31 ஆம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் தொடங்கிய நிலையில்,நேற்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில்,சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும்,இதனால் விவசாயிகள், ஏழைகள் பயன்பெறுவர்எனவும் பிரதமர் மோடி நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும்,மிகவும் சிறப்பான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் எனவும்,இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட் எனவும் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி,பொருளாதார வளர்ச்சியை இந்த பட்ஜெட் ஊக்குவிக்கும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களுடன் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி பேசுகிறார்.அதன்படி,மெய்நிகர் வாயிலாக உரையாடும் பிரதமர் மோடி மத்திய பட்ஜெட் குறித்து தனது கட்சி உறுப்பினர்களிடம் எடுத்துரைக்க உள்ளார்.
மேலும்,டெல்லியில்,பிரதமரின் உரையில் பங்கேற்க பாஜக மக்களவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.